சவூதி உம்முல் குரா பல்கலைக்கழக ஆசிய பிராந்திய கிளை இலங்கையில்
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் நேரில் இணக்கம் சவூதி அரேபியாவின் மக்காவிலுள்ள உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் ஆசியப் பிராந்தியத்திற்கான கிளையை இலங்கையில் அமைப்பதற்கு கொள்கை யளவில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக மகளிர் விவகார, சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று தெரிவித்தார். சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மத்திய கிழக்கிலுள்ள மிகப் பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மக்கா உம்முல் குராவின் கிளையொன்றை இலங்கையில் அமைக்குமாறு சவூதி அரேபியாவிடம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதற்கேற்ப இவ்விஜயத்தின் போது உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் தலைவர் கலாநிதி பக்றி அல் பக்கீரையும், அப்பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.
இப்பேச்சுவார்த்தையின் போது இந்தப் பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை ஆசிய கண்ட நாடுகளின் மாணவர்களது நலன் கருதி இலங்கையில் நிறுவுமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்தேன். இக்கிளையை இலங்கையில் நிறுவுவதற்கு ஏற்ற சாதகமான சூழல் நிலவுவதையும் அவர்களுக்கு எடுத்துக் கூறினேன்.
இப்பல்கலைக்கழகத்தின் ஆசியக் கிளையை இலங்கையில் நிறுவுவதற்குத் தேவையான உயர் கல்வி அமைச்சின் வேண்டுகோள் கடிதத்தையும் அவர்களுக்கு வழங்கினேன்.
அதேநேரம் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் வலுவான அரசியல் ஸ்தீரத்தன்மை நிலவுகின்றது. நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அச்சம், பீதியின்றி நடமாடவும், வாழவும் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். ஆசியக்கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குப் பயணம் செய்வதும் மிகவும் இலகுவான காரியம்.
இக்கிளையை அமைப்பதற்கென நூறு ஏக்கர் காணியைப் பெற்றுத் தருவதாகவும் அவர்களிடம் உறுதியளித்தேன். தாம் முன்வைத்த காரணங்களில் கவனம் செலுத்திய பல்கலைக்கழகத்தின் தலைவரும், பணிப்பாளர் சபை உறுப்பினர்களுமே, இப்பல்கலைக்கழகத்தின் ஆசியப் பிராந்தியக் கிளையை இலங்கையில் அமைப்பதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவித்தனர்.
இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் உம்முல் குரா பல்கலைக்கழக தலைவரும் பணிப்பாளரும் சபையினரும் சவூதி அரேபியாவின் உயர் கல்வி அமைச்சுடனும், வெளிவிவகார அமைச்சுடனும் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
இப்பல்கலைக்கழகம் பொறியியல், மருத்துவம் பெற்றோலிய விஞ்ஞானம், கணனி தொழில் நுட்பம் உட்பட 46 பீடங்களைக் கொண்டிருக்கின்றது. இங்கு 55000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் 300 பேர் ஆசிய கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் 16 பேர் இலங்கை மாணவர்கள் என்றார்.-தினகரன் மர்லின் மரிக்கார்.