Wednesday, May 18, 2011

காஸாவுக்கு உதவிப் பொருள்கள் எடுத்துச் சென்ற மலேசியக் கப்பலை தடுத்தது இஸ்ரேல் கடற்படை!

 
காஸாவுக்கு உதவிப் பொருள்கள் எடுத்துச் சென்ற கப்பல் திங்கட்கிழமை இஸ்ரேல் கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டைத் தொடர்ந்து தனது திட்டத்தைக் கைவிட்டுத் திரும்பியது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதிர் மொஹமட் நடத்திவரும் பர்தானா உலக சமாதான நிறுவனம் எனும் அமைப்பைச் சார்ந்த கப்பலான எம்.வி.பிஞ்ச் கழிவு நீர்க் குழாய்களை ஏற்றிக் கொண்டு காஸாவுக்குப் பயணமானது.

இது கடந்த சில நாட்களாக எகிப்து நாட்டில், எல்-அரிஷ் துறைமுகத்தில் காத்திருந்தது. பின்னர் காஸா நோக்கிப் பயணம் செய்தது. இந்திய நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை சுமார் 4.30 மணிக்கு இஸ்ரேல் கடல் எல்லையைக் கடந்து, காஸா கரையை இக்கப்பல் நெருங்கியபோது, அந்தப் பகுதிக்கு விரைந்த இஸ்ரேல் போர்க்கப்பல் அதைத் தடுத்தது.

எம்விபிஞ்ச் கப்பலுடன் தொடர்பு கொள்ள முயன்று பதிலெதுவும் இல்லாததால், இஸ்ரேல் போர்க்கப்பல் பல முறை வானை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி சூடு நடத்தியது. இதனைத் தொடர்ந்து, பர்தானா உதவிக் கப்பல் அந்த இடத்தைவிட்டு நீங்கி மீண்டும் எகிப்து துறைமுகம் திரும்பியது.
மகாதிர் முகமதின் பர்தானா அமைப்பு இதற்கு முன்பும் காஸாவுக்கு உதவிப் பொருள்கள் எடுத்துச் செல்ல முயன்றுள்ளது. 2010-ம் ஆண்டு சென்ற கப்பல் ஒன்றை இஸ்ரேல் கடற்படை கமாண்டோக்கள் தாக்கினர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இப்போது கழிவுநீர்க் குழாய்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் கப்பலில் மொத்தம் 12 பேர் இருந்தனர் என்று தெரிகிறது. இதில் இருவர் இந்தியர்கள். கப்பலில் பயணம் செய்தவர்களில், பத்திரிகையாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் இருந்ததாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment